Tuesday, October 19, 2010

என்ன கொடுமை சார் இது




நேற்று காலை நாழிதளில் கண்ட செய்தி "கோவை அருகே தனியார் பேருந்துகள் சிறைபிடிப்பு". ஏண்டா சிறை பிடிச்சாங்க அப்படின்னா பயணச்சீட்டு தொகையை விட 50 பைசா அதிகமா வசூலிச்சாங்களாம். அதனால பத்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை சிறைபிடிச்சிருக்காங்க. இதனால போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோட அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்திதான் செய்திதாள்-ல வந்துடுச்சே அதையே ஏண்டா நீயும் பதிவா போடுற அப்படின்னு சிலபேர் கேள்வி கேட்பீங்க... அதுக்கு என்கிட்ட இரண்டு காரணங்கள் இருக்கு.

  1. இந்த மாதிரியான சிறிய செய்திகள் அந்தந்த பகுதி பதிப்புகளில் மட்டுமே பிரசுரிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் வெளிவராது.
  2. இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா "பொதுமக்கள் அரசுப்பேருந்துகளை சிறை பிடிக்கவில்லை".
பொதுமக்களாகிய உங்ககிட்ட நான் கேட்கறது என்ன அப்படின்னா....
50 பைசா அதிகமா வசூலிச்சதுக்காக தனியார் பேருந்துகளை சிறைபிடித்த நீங்கள் ஏன் அரசுப்பேருந்துகளை சிறைபிடிக்கவில்லை?

அரசுப்பேருந்துகளை ஏன் சிறைபிடிக்கனும்னு கேட்கிற மக்களே கொஞ்சம் கீழே உள்ளதையும் படிங்க.



நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். கும்பகோணம் கோட்டத்திலிருந்து அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் பகுதியில் சாதாரண கட்டணம் மட்டுமே வாங்கி வந்தனர். உதாரணமாக தஞ்சையிலிருந்து திருச்சிக்கு செல்ல ரூ15.50 மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்தது. பிறகு Non – Stop, 1 to 1, 1 to 3 மற்றும் தொலைதூர பேருந்துகளான திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை செல்லும் பேருந்துகளில் "EXPRESS" அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டினாங்க. அதுக்காக ரூ.15.50 க்கு பதிலாக ரூ.18.00 வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சாதாரண நகரப்பேருந்து போல திருச்சி செல்லும் பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளில் மட்டும் அதே பழைய கட்டணமே வசூலிக்கிறாங்க.

2 நிமிஷத்திற்கு ஒரு பேருந்து வீதம் தஞ்சையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படுகிறது. EXPRESS பேருந்தில் ரூ.2.50 அதிகமா கொடுத்து விரைவா போய் சேரலாம் அப்படின்னு நீங்க நினைச்சா அது உங்களோட தப்பு. ஏன்னா தனியார் பேருந்துகள் 1 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்று சேர்ந்துவிடும். ஆனா EXPRESS பேருந்து 1 மணி நேரம் 35 நிமிடங்களில் சென்று சேரும். அரசுப்பேருந்தில் செல்லும்போது நீங்களே கவனிக்கலாம் எத்தனை தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்தை முந்திச் செல்கிறது என்று.

ரூ.15.50 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ.18.00 வசூல் செய்யப்படுகிறது ஒருசில அரசு பேருந்துகளில். 50 பைசா அதிகமா வசூலித்தற்காக தனியார் பெருந்துகளை சிறைபிடித்த மக்களே அதைவிட 5 மடங்கு ரூ.2.50 வசூலிக்கும் அரசுப் பேருந்துகளை ஏன் சிறை பிடிக்கவில்லை???

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இய்க்கப்படும் நகரப் பேருந்துகளில் கலர் கலராக வண்ணம் பூசி அதிக தொகை வசூலிக்கப்படுவதில்லை. Versatile Bus என்ற நீண்ட பேருந்துகளில் மட்டும் 50 பைசா அதிகமாக வசூலிக்கின்றனர்.



நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர்-ல வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அதனால இங்க உள்ள பிரச்சனைகளையும் சொல்லிடுறேன். நான் இங்க வந்த புதுசுல எனக்கு தெரிஞ்சு எல்லா நகரப் பேருந்துலயும் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2.00 வசூலித்தனர். இப்போ அந்த 2 ரூபாய் கட்டணத்தை தனியார் பேருந்துகளில் மட்டுமே வசூலிக்கின்றனர். காரணம் எல்லா அரசு நகரப் பேருந்துகளிலும் கலர் கலராக வர்ணம் பூசி குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை 50 பைசா உயர்திவிட்டனர். அதுவும் கோவை போன்ற பகுதிகளில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்கி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5.00 வசூலிக்கப்படுகிறது. இதைப்போன்றே மற்ற பகுதிகளிலும் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

இதைக்கண்டு ஏன் பொதுமக்களே பொங்கி எழாமல் தனியார் பேருந்துகளிடம் மட்டும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றீர்கள்? என்னைப் பொருத்த வரை கொடுக்கின்ற காசுக்கு ஒரு சுகமான பயண அனுபவமும் துரித பயணமும் தனியார் பேருந்துகளில் மட்டுமே கிடைக்கின்றது.
 

பொதுமக்களாகிய உங்களுடையே கோபம் நியாயமானதாக இருந்திருந்தால் அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கும்போதே உங்களுடைய எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்... ஏன் அப்படி செய்யவில்லை??? இத்தனை வருடமாக அரசுப் பேருந்துகள் நம்மை கொள்ளையடித்து வருகின்றன அதை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை.???

எவனோ ஒருவன் திரைப்படத்தில் மாதவன் குளிர்பானத்துக்கு 2 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக கடையை அடித்து நொறுக்குவார். அதே போன்று மக்களை ஏமாற்றுபவர்களையும், கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களையும் கண்டு பிரச்சனை செய்வார். கடைசியில் அவருக்கு ஏற்படும் முடிவு????

எல்லோரும் மக்கள் பிரச்சனைகளை தங்கள் பிரச்சனைகளாக நினைத்து போராடினால் பரவாயில்லை. எல்லோரும் சும்மா இருக்கையில் யாராவது ஒருவர் மக்கள் பிரச்சனைக்காக தலையெடுத்தாலும் தலையை எடுக்கும் தமிழகம் இது. சகித்துப் போக பழகிக் கொள்ளுங்கள் மக்களே.

(என்ன கொடுமை சார் இது!!!!!!)



என்றென்றும்,

2 comments:

Meena said...

அநியாயத்தைக் கண்டு கொதிததுண்டு. இப்பொழுதெல்லாம் பொறுத்துப் போவது உண்டு. எல்லாம் நன்மைக்கே என்று விடுங்கள்

Unknown said...

நன்றி மீனா மேடம்..

Post a Comment